பத்தாயிரம் மைல் பயணம்

தமிழில் பயணக் கட்டுரை நூல்கள் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால் பயணங்களை வரலாற்றுக் கோணத்தில் அணுகுகிற நூல்கள் அநேகமாக இல்லை.

அந்த குறையைப் போக்கும் வித்தியாசமான நூல் இது.

பயணக் கட்டுரை என்பது பெரும்பாலும் ஒரு நாட்டிற்கு அல்லது இடத்திற்குச் சென்று வந்த அனுபவத்தை, அங்கு கண்டவற்றையும் உண்டவற்றையும் பற்றி பேசுகிற சுய அனுபவப் பதிவுகளாக அமைந்திருக்கும்.

ஆனால், இந்த நூல் பயணத்தை வரலாற்றின் வெளிச்சத்தில் அணுகுகிற நூல். நாம் அன்றாடம் உண்ணுகிற உணவு, தினம் தினம் காண்கின்ற விலங்குகள், பறவைகள், தாவரங்கள், வாசித்து மகிழ்ந்த இலக்கியம், கேட்டு நெகிழ்கிற இசை, பல பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள் ஏன் சில விழுமியங்களே கூடப் பயணங்கள் நம் மீது ஏற்படுத்திய மாற்றங்களின் விளைவாக நேர்ந்தவை. அந்தப் பயணங்கள் நேற்றோ அல்லது நெடுங்காலத்திற்கு முன்போ நிகழ்ந்தவைகளாக இருக்கலாம்.

சுருக்கமாக சொல்லப்போனால் அறிவியலுக்கு நிகராக வாழ்வின் மீது தாக்கங்களை ஏற்படுத்தி மாற்றங்களைக் கொண்டு வந்த சிறப்பு பயணங்களுக்கு உண்டு.

மனித வாழ்வில் பயணங்கள் ஏற்படுத்திய மாற்றங்களை எண்ணிப் பார்த்தால் சிறப்பாக இருக்கும். இருக்கிறது. அதை திரு. இறையன்புவின் வழி தரிசிக்கும் போது அந்த ஆச்சரியம் பல மடங்காக விரிகிறது, தொலைநோக்கியின் வழியே நட்சத்திர மண்டலங்களைப் பார்ப்பது போல. அதே நேரம் அவை சிந்தனையையும் தூண்டுகின்றன, ஒரு நுண்ணுயிரை சூட்சம தரிசினியின் மூலம் காண்பதைப் போல.

அது திரு. இறையன்புவின் சொல்லிற்குள்ள வலிமை. கவிதையானாலும், கதையானாலும், கட்டுரையானாலும், உரையானாலும், ஒன்றை ஒரே நேரத்தில் விரிவாகவும் நுட்பமாகவும் சித்தரிக்கும் ஆற்றல் அவருக்குண்டு. நிறைய விவரங்களை எண்ணற்ற ஓவியங்களில் சித்தரிக்கும் மொகலாயச் சிற்றோவியங்களை (Mughal Miniatures) போன்றது அவரது அணுகுமுறை.

சுவாரசியமும், விவரிப்பும் ஒன்றுக்கொன்று முரணானதாக இருக்க வேண்டிய அவசியமில்லை. கற்பனை மட்டுமல்ல உண்மைகளும் கூட சுவாரஸ்யமாக இருக்க முடியும். அதற்கு இந்த நூலே சாட்சி.

இந்த ஒரு புத்தகத்தை படிப்பதன் மூலம் நீங்கள் பல புத்தகங்களைப் படித்த பயனைப் பெற முடியும் என்பது உறுதி. ஏனெனில் திரு. இறையன்பு இந்தக் கட்டுரைகளை எழுத மேற்கொண்ட முயற்சியின்போது பல நூல்களைத் தேடித் தேடிப் படித்தார். குறிப்புகள் எடுத்துக் கொண்டார். அந்தக் குறிப்புகளை மற்ற நூல்களோடு ஒப்பிட்டுச் சரிபார்த்துக் கொண்டார், பின்னர்தான் அவற்றை உரிய இடத்தில் உரிய முறையில் கட்டுரைகளில் பயன்படுத்தினார்.

இந்தக் கட்டுரைகளை எழுத அவர் மேற்கொண்ட உழைப்பு அசாத்தியமானது, வணங்கத்தக்கது. அரசுப் பணியில் ஒரு மிக உயர்ந்த பொறுப்பில் பல பணிகளை ஆற்ற வேண்டிய சூழலில் இருந்தபோதிலும் இதற்கென முக்கியத்துவம் கொடுத்துத் தேடித் தேடி படித்து உழைத்து இந்தக் கட்டுரைகளை அவர் நமக்குத் தந்தார். அதற்கு ஒரே ஒரு காரணம்தான். அது அவர் ‘புதிய தலைமுறை’ யின் மீது வைத்திருந்த அன்பு. அதற்குத் தலை வணங்குகிறோம்.

‘புதிய தலைமுறை’ வார இதழில் 45 வாரங்கள் வெளிவந்த கட்டுரைகள் இப்போது நூல் வடிவம் பெறுகின்றன. வித்தியாசமான முயற்சிகளை வளர்த்தெடுப்பது என்பது ‘புதிய தலைமுறை’ யின் நோக்கங்களில் ஒன்று. ‘புதிய தலைமுறை’ யே ஒரு வித்தியாசமான முயற்சிதான். நான் முன்பு சொன்னது போல இந்த நூல் இதுவரை தமிழில் அதிகம் இல்லாத வகையைச் சேர்ந்த நூல். இதனை வெளியிடுவதில் புதிய தலைமுறை மிக்க மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறது.

ஆன்மிகத்தை ஊறுகாயாக இல்லாமல் உணவாக மாற்றிக கொள்ளும் போது வாழ்க்கை புதிய திசையில், அதிக விசையுடன் பயணிப்பதைப் பார்க்க முடியும். அப்போது ஒவ்வொரு நிழ்வையும் விழிப்புணர்வுடன் அணுக முடியும். அதை வெகுநாட்களாக எழுதவேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது. வாய்ப்புக் கிடைத்தபோது வாழ்க்கை ஒரு வழிபாடு என்கிற தொகுப்பாக மலர்ந்தது. மதங்களை தாண்டியது ஆன்மிகம் என்பதை உணர்த்த எம்மதமும் சாராமல் அனைத்து மார்க்கங்களின் சாரத்தையும் உள்ளடக்கியதாக இது விரிவடைந்த போது எனக்கு உண்மையாக திருப்தி கிட்டியது.

பிறப்பு முதல் இறப்புவரை ஒவ்வொரு தருணத்தையும் எப்படி இறைமைத் தன்மையுடன் எதிர்கொள்வது என்பதுதான் இந்நூலின் சாரம். இது நூலாக வந்தபோதுநிறைய செய்திகளை ஒரேபக்கத்தில் திணித்துத் தந்திருக்றீர்களே என்று ஒருசாராரும், உங்கள் கட்டுரை நூல்களிலேயே சிறந்த நூல் இதுதான்

என்று இன்னொரு சாராரும் இதற்கான எதிர்வினையை முன்வைத்தனர். எழுதியதோடு என் பணி முடிவடைந்து வட்டது. ஏற்பதும் நிராகரிப்பதும் வாசகர்கள் கையில் என்று நான் இருந்துவிட்டேன். ஆனால் இதற்குப் பிறகு ஆன்மிகம் குறித்து நான் எழுதப் போவதில்லை என்று மனத்தில் முடிவு செய்தேன். ஏனென்றால் ஆன்மிகம் குறித்து நான் சொல்ல வேண்டியவற்றையெல்லாம் எழுதி முடித்து விட்டதாகவே எண்ணுகிறேன். அதற்குப் பிறகு நான் படைப்பிலக்கியத்தில் தீவிர கவனம் செலுத்த தொடங்கினேன்.

இந்நூல் 2006-ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்தது. இப்போது ஆறாம் பதிப்பு வெளிவரப்போகிறது என்பது மழிச்சியான தகவல். இதுவரை 15,000- பிரதிகள் எந்தப் பெரிய விளம்பரமும் இன்றி விற்றுள்ளன என்பது இதயத்திலிருந்து எழுதப்படும் சொற்களுக்கான அங்கீகாரம் என்றே கருதுகிறேன். புத்தகங்களை நேசிக்கிற விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் பெரியவர் திரு. மு.வேலாயுதம், புத்தகப் பிரியரே ஒழிய வர்த்தக வெறியர் அல்லர்.

மிக உயர்ந்த எண்ணங்களை படிப்பவர் மனத்தில் விதைப்பதும், உன்னதமான மனிதர்களைப் பற்றிய நுண்ணிய விவரங்களைத் தெரிவிப்பதும், விழிப்புணர்வை அதிகப்படுத்த உந்துதலாக இருப்பதும், உலகின் மகிழ்ச்சியின் அடர்த்தியை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துவதுமே என் எழுத்துகளின் நோக்கம். அதற்கு பெருங்கடலில் சின்னப்படகாய் இந்நூல் என்னுடைய முயற்சி.

என்னுடைய நாவல் சாகாவரம் வாழ்கையே ஒரு வழிபாடு நூலின் தொடச்சி என்றே கருதுகிறேன். படைப்பின் நோக்கத்திற்கேற்ப வடிவம் தன்னைத்தானே தேர்ந்தெடுட்த்துக் கொள்கிறது. ஆறாம் பதிப்பான இதுவும் நிறையப்பேரைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.

 

 
Incredible India


Get the Flash Player to see this player.

time2online Extensions: Simple Video Flash Player Module
Who's Online
We have 87 guests online

Iraianbu © 2011

All Rights Reserved




Webdesign

Purple Rain Media Solutions