வாழ்க்கையே ஒரு வழிபாடு

ஆன்மிகத்தை ஊறுகாயாக இல்லாமல் உணவாக மாற்றிக கொள்ளும் போது வாழ்க்கை புதிய திசையில், அதிக விசையுடன் பயணிப்பதைப் பார்க்க முடியும்.

அப்போது ஒவ்வொரு நிகழ்வையும் விழிப்புணர்வுடன் அணுக முடியும். அதை வெகுநாட்களாக எழுதவேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது.

 

வாய்ப்புக் கிடைத்தபோது ‘வாழ்க்கை ஒரு வழிபாடு’ என்கிற தொகுப்பாக மலர்ந்தது. மதங்களைத் தாண்டியது ஆன்மிகம் என்பதை உணர்த்த எம்மதமும் சாராமல் அனைத்து மார்க்கங்களின் சாரத்தையும் உள்ளடக்கியதாக இது விரிவடைந்த போது எனக்கு உண்மையாக திருப்தி கிட்டியது.

 

பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு தருணத்தையும் எப்படி இறைமைத் தன்மையுடன் எதிர்கொள்வது என்பதுதான் இந்நூலின் சாரம். இது நூலாக வந்தபோது ‘நிறைய செய்திகளை ஒரே பக்கத்தில் திணித்துத் தந்திருக்கிறீர்களே’ என்று ஒருசாராரும், ‘உங்கள் கட்டுரை நூல்களிலேயே சிறந்த நூல் இதுதான்’ என்று இன்னொரு சாராரும் இதற்கான எதிர்வினையை முன்வைத்தனர். ‘எழுதியதோடு என் பணி முடிவடைந்து விட்டது. ஏற்பதும் நிராகரிப்பதும் வாசகர்கள் கையில்’ என்று நான் இருந்துவிட்டேன். ஆனால் ‘இதற்குப் பிறகு ஆன்மிகம் குறித்து நான் எழுதப் போவதில்லை’ என்று மனதில் முடிவு செய்தேன். ஏனென்றால் ஆன்மிகம் குறித்து நான் சொல்ல வேண்டியவற்றையெல்லாம் எழுதி முடித்து விட்டதாகவே எண்ணுகிறேன். அதற்குப் பிறகு நான் படைப்பிலக்கியத்தில் தீவிர கவனம் செலுத்த தொடங்கினேன்.

இந்நூல் 2006-ஆம் ஆண்டு முதல் பதிப்பாக வெளிவந்தது. இப்போது ஆறாம் பதிப்பு வெளிவரப் போகிறது என்பது மழிச்சியான தகவல். இதுவரை 15,000- பிரதிகள் எந்தப் பெரிய விளம்பரமும் இன்றி விற்றுள்ளன என்பது இதயத்திலிருந்து எழுதப்படும் சொற்களுக்கான அங்கீகாரம் என்றே கருதுகிறேன். புத்தகங்களை நேசிக்கிற விஜயா பதிப்பகத்தின் நிறுவனர் பெரியவர் திரு. மு.வேலாயுதம், புத்தகப் பிரியரே ஒழிய வர்த்தக வெறியர் அல்லர்.

மிக உயர்ந்த எண்ணங்களைப் படிப்பவர் மனதில் விதைப்பதும், உன்னதமான மனிதர்களைப் பற்றிய நுண்ணிய விவரங்களைத் தெரிவிப்பதும், விழிப்புணர்வை அதிகப்படுத்த உந்துதலாக இருப்பதும், உலகின் மகிழ்ச்சியின் அடர்த்தியை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துவதுமே என் எழுத்துகளின் நோக்கம். அதற்கு பெருங்கடலில் சின்னப் படகாய் இந்நூல் என்னுடைய முயற்சி.

என்னுடைய நாவல் ‘சாகாவரம்’ வாழ்கையே ஒரு வழிபாடு நூலின் தொடச்சி என்றே கருதுகிறேன். படைப்பின் நோக்கத்திற்கேற்ப வடிவம் தன்னைத்தானே தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. ஆறாம் பதிப்பான இதுவும் நிறையப் பேரைச் சென்றடையும் என்று நம்புகிறேன்.

 
Incredible India


Get the Flash Player to see this player.

time2online Extensions: Simple Video Flash Player Module
Who's Online
We have 41 guests online

Iraianbu © 2011

All Rights Reserved
Webdesign

Purple Rain Media Solutions