நிறவெறிக்குக் கறுப்புக் கொடி

 

காகமே!

மயிலையும் குயிலையும்

மணிக்கணக்காய்

எத்தனையோ புலவர்கள் பாட

அதிகமாய் யாரும் பாடாத

உன்னை நான் பாடுகிறேன்,


பறவைகளில் நீ கறுப்பு

என்பதனால் பாடாமல் விட்டார்களா?


குயில் கூட கறுப்புதான்

ஆனால் அதன் கறுப்பில் கூட பளபளப்பு

எனவேதான் பாடிவிட்டார்கள் போலும்.


ஆகாயத் தோட்டியாய்

அழுக்குகளையெல்லாம் அப்புறப்படுத்தும்

உன்னை எப்படியெல்லாம்

அவமானப்படுத்துகிறோம்

காக்காய்க் குளியலெனவும்

காக்காய்ப் பிடிப்பதெனவும்

காக்காய் வலிப்பெனவும்

காரணமில்லாமல் உன்னை

வைக்கின்றார் வையகத்தார்.


குறும்புக்காரக் குயில்களுக்கு

நீ தான்

அடைகாக்கும்

ஆதரவான செவிலித்தாய்.


அகத்தியன் கமண்டலத்தை

அன்று நீ கவிழ்த்தியிருக்காவிட்டால்

காவிரி ஏது? கல்லணை ஏது?


கவிழ்த்ததே கவிழ்த்தாயே

தமிழக எல்லையில் கவிழ்த்திருக்கக் கூடாதா!

எனச் சிலர் கவலைப்படுகிறார்கள்.


கூடிவாழும் குணத்தை மனிதனுக்கு

போதிக்க எத்தனை முறை முயன்றும்

நீ எமாந்தே போனாய்


இனத்துக்குள் சண்டையிடும்

இழிந்த பழக்கம் இல்லாத

இனிய பறவையே!


வெள்ளைக்கார ஆந்தைகளின்

நிறவெறிக்குப் பலியாகும்

நீக்ரோக்களே!


இனத்தைச் சேர்ந்தவர்

இறந்தால்

அனுதாபக் கூட்டம் அவசரமாய்

நடத்தும் காகாபிமானம் கொண்ட

நீ தான்

நாகரீக உச்சியில் நிற்கிற

நல்ல பறவை.


யாருமே பாடாத உன்னை

நான் பாடியதால்

பெருமை உனக்கல்ல

எனக்குத்தான்.

 
Incredible India


Get the Flash Player to see this player.

time2online Extensions: Simple Video Flash Player Module
Who's Online
We have 28 guests online

Iraianbu © 2011

All Rights Reserved
Webdesign

Purple Rain Media Solutions