தலை மாணாக்கன்

 

விழித்த பொழுது உடலெல்லாம் எரிந்தது. தன் இருத்தலின் தன்மையையும், உடலின் சகல பரிமாணங்களையும் அறிந்து கொள்ள முடியவில்லை. மெல்லப் பிரக்ஞை கூடியது. விழிகளில் தெளிவு நேர்ந்தது. தன்னைச் சூழலோடு நிறுத்தி. அதன் இறுக்கத்தை உணரமுடிந்தது.

‘அனேகமாக மரணத்தைத் தொட்டு மீண்ட அதிசயம் புரிந்தது. தான் இறந்துவிட்டதாகத் தன்னை சகல மரியாதைகளுடன் சாம்பலாக்கும் ஏற்பாடுகளுக்காக மற்றவர்கள் சென்றிருக்க வேண்டும். எந்நேரத்திலும் அவர்கள் வந்துவிடக்கூடும். யுத்தக் களத்தில் மஹா புருஷர்களாய் வருணித்தவர்கள் முந்தைய நாள் வரை இறந்துபோன போது நிகழ்ந்த சம்பிரதாயங்களும், வீர வணக்கங்களும் தனக்கும் நடக்க ஆயத்தங்கள் செய்துகொண்டிருப்பார்கள் என யூகிக்க முடிந்தது.

தூரத்தில் வரிசையாய் தீப்பந்தங்களையும், மெலிதாக அதிகரித்துக்கொண்டு தூரக் குறைப்பை அறிவிக்கும் இசை முழக்கத்தையும் பார்த்ததும் பயம் தொற்றிக்கொண்டது. ஆட்சியைப் பிடிப்பதற்காக எப்படியும் கொல்லலாம் என வரையறுத்தவர்கள் தன்னை நெருங்கியதும் உயிருடன் இருப்பதைக் காணுவார்கள். உடல் தேறியதும் மீண்டும் அவர்கள் குரோதத்திற்கும், விரோதத்திற்கும் இன்னொரு பகடைக்காயாய்த் தான் உழன்று உயிர்விட நேரிடலாம்.

தன் அழகிய வாழ்நாளை வியர்த்தமாய்க் கழித்து விட்டோமோ எனும் நினைவு விரக்தியைத் தூண்டியது. இவர்களிடம் வந்து சேர்ந்ததிலிருந்து ஏற்பட்ட நிகழ்வுகள் வேகமாய் நினைவைக் கடந்தன. நாற்றமெடுக்கும் சகதியில் மாட்டிகொண்டு மீளமுடியாமல் தவித்திருந்த தன்னிரக்க மனநிலைக்கு ஒரு விடிவு வந்துவிட்டது. இனியும் இங்கு நீடிக்காமல் இவரக்ளிடமிருந்து தப்பித்து எங்காவது  சென்றுவிட வேண்டும்.

எழுந்து நின்றபொழுது கால்களில் ரணமான வலி குத்தியது. ரத்தத்தை முழுவதுமாக உறிஞ்சி எடுத்த பலவீனம்.’

வைராக்கியம் வயோதிகத்தை வென்றெடுத்த வேகத்தில் எழுந்து நின்றார். மெதுவாக அந்த இடத்தை விட்டகன்றார். தீப்பந்தம்  நெருங்கி வருகையில் அவரிடமிருந்த உத்வேகம் அதிகரித்தது. யுத்தபூமியை விட்டு வெகுதூரம் வந்த பிறகுதான் அவருடைய சோர்வு புரிந்தது. உடம்பைத் துளைத்திருந்த அம்புகளை பிடுங்கி எடுக்கையில் ரத்தம் கசிந்தது. இனி நகர முடியாது, இருட்டு ஓர் அடிகூட முன்னேற முடியாதபடி கனத்துப் படர்ந்திருந்தது. தூரத்தில் அவர் இருந்த இடத்தைத் தீப்பந்தங்கள் சுற்றித் துழாவுவதையும் வெகு நேரப் பரிசீலனைக்குப் பின் திரும்பிச் செல்வதையும் காணமுடிந்தது. அயற்சியின் பிடியில் கண்கள் சொருக சுற்றிலும் நடப்பது தெரிந்தும் தூங்கிபோனார்.

விடியலில் சூடான கதிர்கள் படுவது உறைக்க எழுந்தார். யாரையும் சந்திக்கத் தேவையில்லாத ஓர் இடத்திற்குச் சென்று வரவேண்டும். அருகில் தெளிந்திருந்த சுனையில் நீராடிய பொழுது புதிய தெம்பு கிடைத்தது. எங்கேயாவது கானகத்திற்குப் போய்விட வேண்டும். இந்தப் பதவி வெறியர்களின் சஞ்சாரமின்றி, போர் எனும் பெயரில் கொலைகளின் மழுப்பல்களுக்கான உடந்தையாகின்ற நிர்ப்பந்தங்களேது மற்ற சுதந்திரமான தன்னிச்சையான வாழ்வை, மனதில் எந்த நினைவுகளுமின்றி நிச்சலனமாய் நிர்மூலமாய் மாற்றி தியானத்திலும், மௌனத்திலும் கழித்துவிட வேண்டும். அருகில் காய்த்துக் கிடந்த கனிகளைக் கண்டதும் அயர்வு அகன்றது. பச்சிலைகளை கசக்கி, காயங்களின் மீது தடவினார். தன் வித்தையையும், பராக்கிரமத்தையும் அரச குடும்பத்திற்குத் தாரை வார்த்துத் தன்னைத்தான் புரிந்து கொள்ளாமல்போன நொடிகளை நினைத்துக் கொண்டார். மரணத்தைத் தொட்டுவிட்டு மீண்டிருக்காவிடின் இந்த உண்மை யெல்லாம் புரிந்திருக்காமல் போயிருக்கும். இன்னும் சில காலமே வாழ்ந்திருந்தாலும் தன்னைத் தனக்காகவே அர்ப்பணித்திருக்கின்ற சுகத்திலும், மெய்யானுபாவத்திலும் கழிக்கின்ற திருப்தியை அள்ளி அள்ளிப் பருகிக் களித்திருக்கத் துடித்தது உள்ளம்.

மூன்று நான்கு நாட்களாய் ஓய்வெடுத்துக்கொண்டு நடந்ததில் அடர்த்தியான காடுகளுக்கு நடுவில் வந்து விட்டிருந்தார். இலைகள் காய்ந்து விழுந்து விழுந்து சலசலத்த மண் மீது நடந்தபொழுது எழுந்து கரைந்த சப்தம் மட்டும் ஒலிக்கும் அமைதி அவர் மனதைச் சுண்டி இழுத்தது.

பறவைகளின் ஒலி மட்டுமே உடைக்கின்ற மௌனத்தினூடே மனம் பயணித்தபொழுது இதுநாள் வரை அறிந்திருந்த ஆனந்தம் இடுப்பிலிருந்து எழுந்து மேனியெல்லாம் பரவுவதை உணர்ந்தார். இங்கேயே நின்றுவிட வேண்டும் எனத் திகட்டிப் போகவில்லை. இன்றும் ஆழமாய், தொலைவாய் ஒளி கூடப் புக சிரமப்பட வேண்டிய இறுக்கமான பசுமை நிறைந்த இடத்திற்குப் போகவேண்டும் என்பதில் நாட்களின் கிழமைகளின் பிரக்ஞையின்றி நடந்தார். நாட்களின் முதுகில் தேதிகள் இருப்பதில்லை. வியாழனெதுவென தெரியாத வரை வெள்ளியும் அந்நியமாய் நிற்கிறது. எத்தனை நாட்கள் சென்றன என்பது பற்றிய அக்கறையின்றிப் போகின்ற நிகழ்வு உலகின் பிடிகளிலிருந்து வலுக்கட்டாயமாய்த் தப்பித்துச் செல்லும்பொழுது நடந்துவிடுகின்றது.

அழகாய்ப் பாம்பு மாதிரி வேர்கள் பின்ன அடர்த்தியாய் வளர்ந்திருந்த மரங்களும், கனிகளின் வளத்தினால் கூந்தலைக் காய வைக்கின்ற பெண்ணாய் படர்ந்திருந்த விருட்சங்களும் சலனங்களின்றிப் படர்ந்திருந்த தடாகமும் இருந்த பரப்பிற்கு வந்தபொழுது, தன்னை நிறைவு செய்கின்ற மையத்திற்குள் பயணப்படுவது போன்ற மென்மை வருடியது.

அந்தப் பிரதேசத்தில் ஒரு பரணசாலை உருவானது. தன் உழைப்பை வியிர்வையைச் சிந்தி அதை உருவாக்கி முடித்தபொழுது ஒன்றை உருவாக்கிய மகிழ்ச்சி, உழைப்பில் உடலெல்லாம் நனைந்த பிறகு தடாகத்தில் வியிர்வையடங்கக் குளித்து முடிக்கையில் ஏற்பட்ட சுகத்தில் ‘இதுதான் தியானமா? மோனத்தையும் கடந்த ஆழ்ந்த உள் நிலையா? அதற்கப்பால் ஏற்படும் உணர்வா?’

புதிய வாழ்க்கை மிகவும் பிடித்துப்போனது. பறவைகளின் பாடும் ஒலியும் மிருகங்களின் சம்பாஷணைகளும் தடாகப் பூக்களின் நறுமணமும் உலகமாகிப் போயின. நொடிக்கு நொடி மாறும் மனோபாவனைகளின்றி சீரான நீரோட்டமாய் வாழ்க்கை லகுவாய்ப் போனது. தன் மீது விழுகின்ற ஒவ்வொரு நீர்த்துளியையும் ரசிக்க முடிந்தது. மரங்களின் அடியில் அமர்ந்து விழிகளை மூடி தியானிக்கையில் தன்னை அழுத்தி வந்த உலகம் மிருதுவாகி கனமிழந்து பஞ்சுபஞ்சாய் மிதப்பதை சிலாகிக்கத் தோன்றியது.

ஒருநாள் மாலையில் பூஜை செயவதற்கு மலர்களைக் கொண்டுவரச் சென்றார். மலர்களின் கழுத்துகளைத் திருகித் திரும்புகையில் வெறிபிடித்த முகத்துடன் கண்களில் தன்னைக் கிழித்துவிடுகின்ற குரூரத்துடன் தன் மீது பாயவிருந்த சிறுத்தையொன்று அவரை ஸ்தம்பிக்க வைத்தது. அந்த நொடியிலும் மனிதர்களுடைய செயற்கை வெறிக்கு பலியாவதிலும் ஓர் உயிருக்கு உணவாகிவிடுவது மேலானது எனத் தோன்ற தன்னை முழுதுமாய் அதன் வசம் ஒப்புவித்தார். அந்த நொடியில் எங்கிருந்தோ வந்த அம்பு அதன் கழுத்தை ஊடுருவ செயலிழந்து விழுந்தது அது. இந்த ஜனவாசமற்ற இடத்தில் தன்னைக் காப்பாற்றியது யார் என்ற வியப்பில் அம்பு வந்த நேர்த்தியையும், வேகத்தையும் அனுமானித்தவாறு திரும்பியபொழுது நிகழ்ந்த விழிப்பில் அவர் உடலெல்லாம் வேதனையாலும், வெட்கத்தாலும்   குறுகிப்போனது.

வளைந்திருந்த வில்லின் நாணப் பல்லால் கடித்தபடி கட்டைவிரல் துண்டித்திருந்த நிலையில் அவன் நின்றிருந்தான். கறுத்திருந்த மின்னுகின்ற மேனி அவரைக் கண்டதும் பணிவால் வணங்கியது. அவரை நோக்கி அவன் ஓடோடிவந்தான். அவர் பாதங்களைத் தொட்டு வணங்கி நிமிர்ந்தபொழுது அவருடைய விழிகள் தளும்பியிருந்தன.

“ஐயா! தாங்கள் எப்படி இங்கே வந்து சேர்ந்தீர்கள். வசதியாய் சகல சௌகரியங்களுடன் வாழவேண்டிய நீங்கள் ஏன் இப்படிக் கல்லிலும் முள்ளிலும் நடந்துசெல்லும் கட்டாயம் நேர்ந்தது?”

அந்த இறுக்கமான காலத்திலும் அவன் தன்னைக் காப்பாற்றியதைப் பற்றிய பெருமையோ ‘நீ தானே என் கட்டைவிரலை வாங்கினாய். ஆனாலும் என் வித்தையை உன்னால் கபளீகரம் செய்ய இயன்றதா?’  என்று யாருமே கோடிட்டுக் காட்டும் சுபாவமோ சிறிதுமற்று தன்னைப் பற்றிய கவனிப்பில் ஆழ்ந்திருக்கும் அவனை அதிசயமாகப் பார்த்தார்.

அவருக்கு வார்த்தைகள் வரவில்லை. தான் கற்றிருந்த வேதங்களும், உபநிஷதங்களும் வியாக்கியானங்களும் தமக்குக் கை கொடுக்கவில்லையெனப் புரிந்தது. இந்த வேடுவனைப் பாதங்களுக்கடியில் போட்டு மிதித்து துவம்சம் செய்கின்ற போக்கில், தான் ஆற்றியது அவரைக் குத்தி ரணமாக்கியது. எப்படி எதுவுமே நிகழாததுபோல் தன் அருகில் இருந்து அனைத்து யுத்த ரகசியங்களையும் தாரை வார்த்துத் தான் கொடுத்தது போன்ற விசுவாசத்துடன் நடந்துகொள்ள முடிந்தது. இவனது இந்த பெருந்தன்மை அவன் கால்களுக்குக் கீழே தான் நின்றிருக்கின்ற தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தியது.

“ஐயா! என்னோடு எங்கள் குடிலுக்கு வாருங்கள். எங்கள் பூமி உங்கள் பாதம் படுகின்ற புண்ணியத்தைப் பெறவேண்டும்.”

அவன் பின்னால் எந்தத் தடையும் சொல்லாமல் அவர் கால்கள் பயணித்தன. வெகு தூரத்திற்கப்பால் முப்பது நாற்பது குடில்கள் அந்த அடர்ந்த காட்டிற்குள் பொருத்தி நின்றிருந்தன.

அவர் சென்றவுடன் அந்தக் கூட்டம் அவரைச் சூழ்ந்தது. யாவரும் அவருக்கு உபசாரம் செய்வித்தனர். ஒரு பெரிய தட்டு நிறைய தண்ணீரைக் கொண்டுவந்து அவர் பாதங்களை அலம்பினான். அவனது விழிகளிலிருந்து பெருக்கெடுத்து வழிந்த துளிகளும் அதில் கரைந்தன.

“ஐயா! எங்களோடேயே இருந்துடுங்க. நாங்க உங்களை கவனிச்சுக்குவோம். நீங்க பூஜை பிரார்த்தனையெல்லாம் பண்ணத் தேவையான பூ பழமெல்லாம் தருவோம். நீங்க அமைதியா எந்தப் பரிச்சனையுமில்லாம தியானம் பண்ணலாம்.”

அவன் குரலில் தெரிந்த குழைவு அதிசயமானது. தன் மகனின் கட்டைவிரலை காயடிக்கிற வன்மத்துடன் ரத்தம் சொட்டச் சொட்ட வெட்டி மகிழ்ந்த கிழவனைத் துவேஷமின்றி சலனமின்றி எப்படி இயல்பாய் எடுத்துக்கொண்டு மரியாதை பண்ணமுடிகிறது!

அவர்களோடு சமமாக அமர்ந்து சாப்பிடத் தோன்றினாலும் இத்தனை நாளாய் மனதில் ஊறிய ‘தான் உயர்வு’ என்கிற எண்ணம் இறுக்கிப் பிடித்தது. அவரால் முடியவில்லை. வலுக்கட்டாயமாய்த் திணித்த பழங்களையும், காய்களையும் அவர்கள் சமைத்திராத காரணத்தால் உண்ணமுடிந்தது.

“நான் உங்களோடு வந்து தங்குவதற்கான நேரம் வரும்பொழுது வருகிறேன்.” அவரைப் பர்ணசாலை வரை கொண்டுவிடுவதற்காக அவனும் அவருடன் சென்றான். ஓரிடத்தில் இன்னமும் தன் சிலை இருப்பதையும், அந்தப் பீடத்தில் புதிதாய்ப் பூக்கள் இறைந்துகிடப்பதையும் கண்டார். இத்தனை வருடங்களோடிய பின்னும் தன்னை மனதில் பசுமையாய் வைத்துப் பக்திமயமாய்ப் பூரித்திருக்கும் இவனெங்கே தன்னயே நேர் எதிராய் நின்று எதிர்த்த அவரகள் எங்கே! அவர் மனம் கசிந்தது. இனியும் மௌனத்தைப் போர்த்திக்கொண்டு இருப்பதில் பயனில்லை.

“இந்தப் பூஜை இன்னுமா தொடர்கிறது?”

“ஆம், ஐயா குருவிற்கும், சிஷ்யனுக்குமான தொடர்பு எந்தக் காலத்திலும் மாறாதது.”

“அப்படியா! நான் உனக்கு அப்படி என்ன நல்லது செஞ்சேன். உன்னோட கட்டை விரலை வெட்டிவாங்கிட்டேன்னு உனக்கு ஒருநாள் கூடக் கோபம் வந்ததில்லையா?”

“அப்படியில்லை ஐயா! குருவுக்காக எதையும் கொடுக்கத் துணிஞ்சவன் நான்; அப்படீன்னு இந்த உலகத்துக்கு நிரூபிக்கிறதுக்குத்தான் செஞ்சீங்க. என் குரு என்னை எப்போதும் வஞ்சிக்க மாட்டாருங்கற நம்பிக்கையிலதான் என் கட்டை விரல் போன பிறகும் பயிற்சியைத் தொடர்ந்தேன். பல்லினால் நாணைத் தொட்டு இழுத்துப் பார்த்தேன். தொடர்ந்து பிரயத்தனம் பண்ணினப்ப கை கூடிச்சி. எங்களுக்கு அபரிமிதமான வித்தை எதுக்குங்க ஐயா! எங்களைச் சுத்தியிருக்கின்ற அபாயத்திலிருந்து எங்களைக் காப்பாத்திக்கறத்துக்காகத்தான். எங்களுக்கென்ன ராஜ்ஜியம் பிடிக்கற ஆசையா இருக்குது நாங்க இருக்கற காட்டுக்குள்ள வேற யாரும் வராம இருந்தாலே எங்களுக்கு சுதந்திரம் பாதிக்கப்படாதுங்க.”

அவன் வார்த்தைகளின் கனம் அவரை நொறுக்கியது. இதுதான் ஞானம். “இதுதான் அனுபவம். எந்த ஒரு வேதப் புத்தகத்தையும் வாசித்தறியாதவன் வாழ்க்கையின் நீரோட்டத்தைப் புரிந்துகொண்டுவிட்ட முதிர்ச்சியின் விளைவு” என மகிழ்ந்தார். குனிந்து அவன் பாதங்களைத் தொட்டுவிடலாமா எனும் நினைவு உரசும்பொழுது லாவகமாகச் சுதாரித்துக் கொண்டார்.

பார்ணசாலையை அடைந்ததும் அவனை வழியனுப்பி விட்டு அமர்ந்தார். தியானிக்க முடியவில்லை. பூஜிக்க முடியவில்லை. அவன் அவருக்கு எதை எதையோ புரிய வைத்தது மாதிரி ஓர் எண்ணம்.

“நாங்க கத்துக்கற வித்தையெல்லாம் எங்களை சுத்தியிருக்கிற அபாயத்திலிருந்து எங்களைக் காப்பாத்திக்கறதுக்காகத்தான்” அவர் காதுகளில் திரும்பத் திரும்ப எதிரொலித்தன அந்த வார்த்தைகள். அந்த மௌனத்தில் அந்த பிரதிபலிப்பு பெரிதாகப் பெரிதாகி அவருடைய மனதில் சலனங்களை நீரில் எறிந்த கல் ஏற்படுத்தும் அலை வட்டங்களாய் விரித்துப் பாதித்தது.

ஒரு காதலுக்கும் மேலானதாய், ஒரு பக்தியிலும் யதார்த்தமானதாய் ஒரு தோழமையினும் நெருக்கமானதாய்ப் படிந்துவிட்ட குருவின் அந்த மௌனத்திலிருந்தே தான் கற்றுகொண்ட நியாயங்களை அசை போட்டுக் கொண்டே அடுத்த நாள் மாலை அவருடைய பர்ணசாலையை நெருங்கியவனுக்கு பேரதிர்ச்சி அவர் அங்கு இருக்கவில்லை. வெளியில் சென்றிருப்பாரோ என வெகுநேரம் காத்திருந்தான். பல நாட்கள் அங்கு வந்து பார்த்ததில் அங்கு யாரும் வசிக்காத தடயம் தென்படவே அவர் அவனுக்கு தெரியாமல் இடம் பெயர்ந்துவிட்ட உண்மை அவனுக்கு இன்னொரு இடியானது. ஏன் இன்னும் என்னை நம்பாமல் விட்டுவிட்டார். இன்னுமும் அவர் மனதிற்குள் பாரபட்சம் வழிந்தோடுகிறதோ?

‘எப்படியும் அவரைக் கண்டுபிடிப்பேன். அவர் இன்னும் சிலகால தூரத்தில்தானிருக்க வேண்டும். தினமும் அவர் பாதங்களைக் கழுவி வழிபடும் பாக்கியம் பெறுவேன். என் வைராக்கியத்திற்கான இன்னொரு சோதனையையும்  வென்றெடுப்பேன்.’

பல நாட்கள் ஓடினான். களைப்பை மீறிய வேகம் அவனை இயக்கியது. எத்தனை நாட்கள் என்பது தெரியாது. ஒருநாள் தான் கண்டிராத இன்னொரு வேட்டுவக் கிராமத்தைத் தொலைவில் கண்டான். நெருங்கும்பொழுது ஒரு மைதானத்தில் வேடுவச் சிறுவர்கள் வில் பயிற்சி செய்வது தெரிந்தது. அருகில் சென்று அடர்த்தியாய் வளர்ந்திருந்த மரங்களின் பின் மறைந்துகொண்டு நடப்பதை உற்று கவனித்தான்.

அங்கே நரைத்த தாடி தாடையிலிருந்து அருவியாய் வழிந்தோடக் கண்களில் இதுவரை கண்டிராத தீட்சண்யத்துடன், நிறைவுடன் மகிழ்ச்சி மின்ன அவர்களுக்கெல்லாம் அவர் வில்வித்தையைப் பயிற்றுவித்துக்கொண்டிருந்தார். அவர்கள் பயிற்சி முடிந்ததும் தான் சென்று அவரை தரிசிக்கலாம் எனும் பெறுமையுடன் அந்தத் தவத்தைக் கலைக்காமல் காத்திருந்தான்.

பயிற்சி முடிந்தது.

நீங்கள் அனைவரும் உங்கள் குருவை வணங்குங்கள் எனும் கட்டளை அவரிடமிருந்து பிறந்ததும் மாணவர்கள் தங்கள் விற்களை சுழற்றி வைத்து வணங்கிய இடத்தைப் பார்த்தான்.

அங்கேயொரு சிலை. அவனுக்கு ஆர்வமாயிருந்தது. தங்கள் வேட்டுவ உடையுடன் யாரது எனப் பார்த்தான். ஊடுருவிப் பார்த்ததில் ஒருவேளை தனக்குத் தெரிந்த யாரோ, எங்கோ பார்த்ததுபோல இருக்கிறதே. தன் தந்தையைப் போன்ற மூக்கும் உதடுகளும் ஆனால் வயதான தோற்றம் தெரியவில்லையே? பார்வையில் இளமையாய் இருக்கிறதே. கண்களை இறக்கியபொழுது கையொன்றிலில்லாத கட்டை விரலில் புரிந்துபோனது சிலை யாருடையதென்று.

இதயமெல்லாம் நொறுங்கிப்போன அதிர்ச்சி. இனி அவரை அவனால் சந்திக்கமுடியாது. சிந்திக்கவும் கூடாது. அவரைப் பார்க்காமலேயே இறந்துவிட வேண்டுமென்று யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து அகன்றான். இதயம் கனத்துப் பேச்சற்று சிந்தனையற்ற நிலையில் சென்று கொண்டிருந்தான்.

 
Incredible India


Get the Flash Player to see this player.

time2online Extensions: Simple Video Flash Player Module
Who's Online
We have 31 guests online

Iraianbu © 2011

All Rights Reserved
Webdesign

Purple Rain Media Solutions