பேசப் பேச

 

நாம் பேசுகின்ற ஒவ்வொரு வாசகமும் நீரில் எழுதியது போல் அழிந்து போகாமல் கல்லில் எழுதியது போல நிலைத்து நிற்க வேண்டுமென்றால் அதில் தீவிரத் தன்மையைக் கொண்டு வரவேண்டும். பேச்சும் குரலும் கருத்துக்களும் இயையும்போது அந்த நினைவு மனதைச் சுற்றி ரீங்காரம் இடுகிறது தேனீயின் பாடலைப் போல தெவிட்டாமல் இருக்கிறது.

சகல நேரமும் பேசுபவர்கள் மழைக்கால இரவில் தொடர்ந்து சப்தமிட்டு நம்மைச் சப்தத்தால் நச்சரிக்கும் தவளையை நினைவுபடுத்துகிறார்கள்,

தமிழகத்தில் எண்ணற்றோர் திறம்படப் பேசியிருக்கிறார்கள். சமூகத்தைத் தூக்கிநிறுத்த அவர்கள் பேச்சு ஏர்முனையாக இருந்திருக்கிறது. அவர்களையே ‘சொல்லேர் உழவர்’ என்று சுகமாக அழைக்கிறார் வள்ளுவர்.

திரு.வி.க., பெரியார். அண்ணா. மறைமலையடிகள் போன்றவர்களெல்லாம் தமிழகத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று அடுக்கு மொழி சொற்களால் அடக்கு முறைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து சமூகத்தை மேம்படுத்தியவர்கள்.

அவர்கள பேச்சும். மூச்சும் ஒன்றாக இருந்ததால் அவர்கள் ஏச்சில்கூட எதுகை மோனை இருந்தது. மக்கள் கவனிக்கிறார்கள். அவர்கள் அலங்கார வார்த்தைகளில் தங்களை அடகுவைத்து விடுவதில்லை. யாருடைய எழுத்தும், பேச்சும், சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கிறதோ அவர்களையே அவர்கள் போற்றுகிறார்கள்.

ஒவ்வொரு காலகட்டத்திலும் பேச்சில் வல்லவர் ஒருவர் வாழ்ந்திருக்கிறார். அவர் நாவின் சுழலில் நாடே சுழன்றிருக்கிறது. சிசரோ. டெமஸ்தனிஸ் என்று மேற்கிலும் நாவன்மையால் மக்களை எழுச்சி கொள்ளச்செய்தவர்கள் இருந்திருக்கிறார்கள். கிழக்கிலும் ஆன்மிக முடிவுகளுக்கு கூட வாதமே மையமான ஊடகமாக இருந்திருக்கிறது.

புத்தர் போகின்ற வழியெல்லாம் எதிர்க் கொள்கையினர் வாதம்புரிந்து அவரிடம் தோற்று அவரது சீடர்களாகவே சீர்திருத்தம் பெற்றிருக்கிறார்கள்.

ஆதிசங்கரர் மந்தன்மிஸ்ராவிடம் நடத்திய வாதம் சுவாரசியமானது.

‘விளக்கு’ எனும் நூலில் வாரியர் உண்மை, நன்மை, அன்பு நிதானம், இனிமை ஆழம், சமயம், சபை ஆகிய எட்டு கூறுகளும் சிறந்த பேச்சுக்கு அவசியமான அங்கங்கள் என்று கூறுகிறார்.

உண்மை என்பது இருப்பதைக் கூறுவதல்ல. தீங்கில்லாததைக் கூறுவது. எல்லாருக்கும் நன்மையானதைக் கூறமுடியாது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு எது நன்மை விளைவிக்குமோ அதைக் கூறவேண்டும். அப்படிக் கூறும்போது ஒரு சிலர் தீமை அடைந்தாலும் அதைப் பொருட்படுத்தக்கூடாது. பலரைத் தென்றலாகக் குளிர்விக்கும் சொல்லே சிலருக்குத் தீயாய்ச் சுடவும் செய்யலாம்.

அன்போடு பேசுவது என்பது அக்கறையோடு பேசுவது. செவியையும், சிந்தையையும், உள்ளத்தையும், உணர்வையும் குளிர்விக்கும். நிதானமாகப் பேசுவது நம் பேச்சின் சாரம் அடுத்தவர்களை அடைவதற்காகப் பேசுவது. மற்றவர்களை ஸ்தம்பிக்க வைப்பதற்காகவும், நம் திறமையைக் காட்டுவதற்காகவும் பேசுவது அல்ல. பேச்சின் இனிமை என்பது, ரசனையும் மகிழும்படி, கேட்கும்படி, கிரகிக்கும்படி, மலரை அர்ச்சிப்பது போல் மென்மையாகப் பேசுவது. பேச்சில் ஆழம் என்பது கருத்துச் செறிவுடன் கலை நயத்துடன் பேசுவது. சொல்ல வேண்டிய நேரத்தில் சொல்லவும் வேண்டும். சில நேரங்களில் சொல்லாமல் இருக்கவும் பழகவேண்டும். யாருக்குப் பேசுகிறோம். எதற்காகப் பேசுகிறோம் என்பன அறிந்து அவைக்குத் தகுந்தபடி பேசும்போது பேச்சு முற்றுப் பெறுகிறது. அதன் பலனும் கைகூடுகிறது.

சர்ச்சில் இளமையாக இருந்தபோது முறுக்கு மீசை வைத்திருந்தார். அவர் அரசியலும் தீவிரமாகவே இருந்தது. ஒரு விருந்தில் வயதான ஒரு மூதாட்டி அவரை சந்தித்தார். அவரோ பழமைக் கருத்துக்களில் பழம் தின்று கொட்டை போட்டவர். சர்ச்சிலோ புதிய கருத்துக்களுக்கு முலாம் பூசுபவர்.

அந்தப் பெண்மணி வெகுநேரம் அவரோடு வாதம் செய்துவிட்டு, “எனக்கு உங்கள் அரசியலும் பிடிக்கவில்லை, மீசையும் பிடிக்கவில்லை” என்று கோபமாக கூறினார்.

சர்சிலோ நிதானமாகச் சிரித்துகொண்டே “நீங்கள் அவை இரண்டின் அருகிலும் வருவதற்கு வாய்ப்பே இல்லை” என்று ஒரு போடுபோட்டார்.

பேச்சு என்பது அனல் தெறிப்பில் இல்லை. புனல் தெளிப்பதிலும் அடங்கியிருக்கிறது.

 
Incredible India


Get the Flash Player to see this player.

time2online Extensions: Simple Video Flash Player Module
Who's Online
We have 15 guests online

Iraianbu © 2011

All Rights Reserved
Webdesign

Purple Rain Media Solutions