என்னைப் பற்றி

“உயர்ந்த இலக்குகள் கொண்ட நடுத்தரக் குடும்பத்தில் ஓர் உயிரியல் விபத்தாய் நிகழ்ந்தது என் பிறப்பு. பெற்றோர்களுக்கு நான்காவது குழந்தையாக சேலம் நகரில் 1963 செப்டம்பர் 16 ஆம் தேதி எனக்கு இந்த உலகம் அறிமுகமானது. தலையைச் சுற்றிக் காதைத் தொடும் பள்ளிக்கூட அனுமதியில் கை எட்டாததால் பிறந்த நாள் ஜூன் 16 ஆக மாற்றப்பட்டது. தமிழ் மறுமலர்ச்சி மாநிலத்தில் தீவிரமாக நடந்து கொண்டிருந்த காலம் என்பதால் என் பெயரும் என் சகோதர சகோதரிகளைப் போல தமிழ்ப் பெயராகவே இருந்தது. என்னைச் சந்திக்கின்ற பலரும் இது இயற்பெயரா? புனைப்பெயரா? என்று கேட்கும் போதெல்லாம் காரணப் பெயராக ஆக்க முயற்சி செய்கிறேன் என்கிற பதிலையே நான் தருவதுண்டு.

சின்ன வயதிலேயே மேடையில் பேசும் பயிற்சி தரப்பட்டதால் மாவட்டத்தில் நடக்கிற பேச்சுப் போட்டிகளில் எல்லாம் எங்கள் குடும்பத்திற்கே அத்தனைப் பரிசுகளும் வந்துசேரும். அப்படி துளிர்விட்டது தான் படிக்கிற ஆசை. ஐந்தாம் வகுப்பு வரை தமிழில் படித்ததால் தாய் மொழியில் பேசவும், எழுதவும் சிக்கலில்லாத திறனை வளர்த்துக்கொள்ள முடிந்தது. அருகிலிருக்கிற பள்ளியே சிறந்த பள்ளி என்று கருதப்பட்ட அந்தக் காலத்தில், நாங்கள் படித்த பள்ளிக்காக அருகிலேயே குடியிருக்க தந்தை செய்த முயற்சி எங்கள் கல்வியை செதுக்கவும், செம்மையாக்கவும் உதவியது.

இயற்கையின் மீதும், செடி கொடிகளின் மீதும் இயல்பாகவே ஏற்பட்ட ஈர்ப்பு எனக்கு இன்னும் நீங்காமல் இருக்கிறது. என் கைகளால் விதைகளை நட்டால் வேகமாக வளரும் என்று காய்கறிச் செடிகளின் விதையை பாட்டி என்னிடமே தரும். கல்லூரியில் வேளாண்மைப் படிப்பை தேர்ந்தெடுத்த போது மதிப்பெண்களுக்காகப் பட்டாம்பூச்சிகளை விஷக்குப்பியில் அடைத்து வைக்க விசனப்பட்டவன் நான். எங்கள் கல்லூரிச் சூழலும் விசாலமான தாவர இயல் பூங்காவும் எனக்குள் இருந்த கவிதை ஆர்வத்தை கிளர்ந்தெழச் செய்தன. விடுதி வாழ்க்கை புதிய தேடலையும் பொதுவுடமைப் பார்வையையும் எனக்குள் விதைத்தன. மார்க்சியம் குறித்தும், இலக்கியம் குறித்தும் நிறைய கற்றுக்கொள்ள விரிவான களம் அமைந்தது. அப்போது நாங்கள் இந்தியாவில் நிச்சயம் புரட்சி வந்துவிடுமென்று திடமாக நம்பினோம். ஆனால் அது சாத்தியமே இல்லை என்பது இப்போது புரிகிறது. பல பூங்காக்களில் அமர்ந்து கொண்டு எங்களுக்கு தெரிந்த இலக்கியங்களை விவாதித்துக் கொண்டும், தீவிரமாக அவற்றைப் பற்றி சண்டையிட்டுக் கொண்டும் சமூக மாற்றத்தின் கருவிகள் நாங்கள் என்பதுபோல நாங்கள் நடந்து கொண்டதுண்டு. அப்போதுதான் பலதரப்பட்ட மக்களிடம் பழகுகிற வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. வ.உ.சி. பூங்காவில் ஒவ்வொரு சனிக்கிழமையும் கவிதை வாசிப்பு நிகழும். அதை முன்னின்று நடத்தியவர் பழைய செயதித்தாள்களை சேகரித்து விற்பவர் என்கிற உண்மை தெரிந்தபோது மனம் தளர்ந்தது. அந்த வருமானத்தில் எங்களுக்கெல்லாம் தேநீர் வாங்கித் தருவார்.

 

மார்க்சியம் குறித்தும், இலக்கியம் குறித்தும் நிறைய கற்றுக்கொள்ள விரிவான களம் அமைந்தது. அப்போது நாங்கள் இந்தியாவில் நிச்சயம் புரட்சி வந்துவிடுமென்று திடமாக நம்பினோம். ஆனால்


கல்லூரியில், அதிகம் படிக்கின்ற மனநிலை பல்வேறு காரணங்களால் எனக்கு ஏற்படாமல் போனது. பெரிய விஞ்ஞானி ஆகவேண்டும் என்கிற எண்ணத்துடன் நுழைந்த நான், படித்தது போதும் என்று வெளியே வந்தேன். அப்போது வேளாண்துறையில் வேலை கிடைத்தது. அங்கிருந்த சூழல் பெரிய பணி கிடைத்தால் தான் ஏதாவது உருப்படியாகச் செய்யமுடியும் என்கிற உந்துதலை எனக்கு ஊட்டியது. இராயக்கோட்டை என்கிற கிராமம் (தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம்) என்னுடைய இலக்குக்கு தொட்டிலாக இருந்தது. அங்கு இருந்த குறைந்தபட்ச வசதிகளைக் கொண்டு தேர்வுக்குப் படித்தேன். அதற்கு பிறகு இலக்கிய வாசிப்பு குறைந்து இலக்குக்கான வாசிப்பு மாத்திரம் நிகழ்ந்தது. அந்தக் காலத்தில் இப்பொழுது இருக்கிற வசதிகள் இல்லை.

குடிமைப் பணிகளில் தேர்ச்சி பெற்ற பிறகு, அதை மிகப்பெரிய சாதனையாக ஒருபோதும் நான் கருதவில்லை. மிக எளிதில் பெற்ற வெற்றியாகவே அதை கருதினேன். அந்தப் பதவிக்கு என்னை தகுதிபடுத்திக் கொள்ள வேண்டுமென்று முயற்சிகள் மேற்கொண்டேன். மசூரியில் நடந்த பயிற்சி என்னுடைய பரிமாணங்களைப் பட்டை தீட்ட உதவியது.

களப்பணிகளில் இருக்கும்வரை கடிதம் எழுதக்கூட முடியாமல் பணியாற்றிய எனக்கு சென்னை வந்தபோது இலக்கியத்தில் நாட்டம் செலுத்த நேரம் கிடைத்தது. நான் தொலைக்காட்சியில் பேசவும் வாய்ப்புகள் உருவாகின. எழுத்தைக் காட்டிலும் பேச்சு பலரிடம் என்னைக் கொண்டு சேர்த்தது. தமிழகத்தில் இருந்து நிறைய மாணவர்கள் குடிமைத் தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமென விருப்பப்பட்டு அதுகுறித்து நான் எழுதிய நூல் பரவலாகப் பேசப்பட்டது.

நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், உருவகக் கதைகள். கவிதைப் புத்தகங்கள், பல ஊடகங்களில் ஆற்றிய சொற்பொழிவுத் தொகுப்புகள் போன்றவை வெளிவரத் தொடங்கின. அத்தியாவசியமான முயற்சிகளை மேற்கொள்ள எனக்கு விருப்பம் ஏற்பட்டது. தொடர்ந்து பணிகளைத் தாண்டி எழுதுவதற்கான நேரம் ஒதுக்க நான் பயிற்சி பெற்றேன். ஆங்கிலத்தில் எழுதவும் முற்பட்டேன். இரண்டு புத்தகங்கள் ஆங்கிலத்தில் வெளிவந்தபோது மகிழ்ச்சி ஏற்பட்டது. படைப்பிலக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் இப்போதைய குறிக்கோள். கலைத்துறையிலும் ஒருசில வாய்ப்புகள் வருகிற போது அவற்றை நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. பெரிய அலை வந்து என்னை குலுக்குகிற போதெல்லாம் என் வாசிப்பும், எழுத்தும் நான் நிலைகுலைந்து விடாதபடி பார்த்துக்கொள்கின்றன.

 
Incredible India


Get the Flash Player to see this player.

time2online Extensions: Simple Video Flash Player Module
Who's Online
We have 39 guests online

Iraianbu © 2011

All Rights Reserved
Webdesign

Purple Rain Media Solutions